- இல.சண்முகசுந்தரம்
ஜூலை.19, ஊரடங்கின் 117வது நாள்.
துவக்கத்தில் மார்ச்.25ல் 618 என இருந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை இன்று 10,77,945.
Courtesy. THE HINDU JULY.19.
தமிழகத்தில் ஏப்ரல் 2ல் 264 என இருந்த எண்ணிக்கை இன்று 1,60,907.
என்னதான் நடந்துகொண்டிருக்கிறது?
ஒவ்வொரு நாளும் கொரோனா புதிய உச்சத்தைத் தொடுகிறது. பரவலைத் தடுக்கவே ஊரடங்கெனில், சில நூறு இருந்தபோதே ஊரடங்கு துவங்கிய இந்தியாவில், பத்து இலட்சம் வரை அதிகமானது ஏன்? அப்படியெனில் கொரோனா பரவுவதை ஊரடங்கு மூலமாக குறைக்க முடியுமா, முடியாதா?
அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளதால்தான் நாம் ஒவ்வொருவரும் ஒத்துழைக்கிறோம். ஆனால், ஊரடங்கிற்கும் ஒரு அளவு இருக்கிறதே?
துவக்கத்தில் நம்மை மிரட்டிய ஸ்பெயின் இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸெல்லாம் இன்று இயல்புக்கு வரத்தொடங்கிவிட்டது. ஆனால், அன்லாக் என்று சொல்லிக்கொண்டே இங்கே பாதிப்புகளும். பயமும் அதிகமாகிறதே, காரணமென்ன? யாரிடம் கேட்பது?
21 நாள் கணக்கில் முடிவு செய்து முதல் ஊரடங்கு அறிவித்தார்களே, என்ன கணக்கு அது? அந்த 21 நாட்களுக்குள் நோயைக் கட்டுப்படுத்தும் திட்டம் தீட்டி, 21 நாள் எனத் தீர்மானித்தார்களா அல்லது முதலில் அறிவிப்போம் அப்புறம் பார்ப்போம் என நினைத்து அறிவித்தார்களா? ராசியான எண் எனும் நம்பிக்கையில் அறிவித்திருக்கமாட்டார்கள் என நம்புவதால் இப்படிக் கேட்பதுதானே நியாயம்?
சரி, அப்புறமேன் இரண்டாவதாய் ஒரு 21 நாள். அடுத்து அது ஏன் 14 நாள் என மாறியது? இன்னுமோர் 14 நாள் என்றீர்களே, இதெல்லாம் என்ன கணக்கு? நம்பிய ஒன்று பலனளிக்காத போது அதைப் பரிசீலிப்பதுதானே பகுத்தறிவு? அதனால்தான் இப்போதாவது கேட்கவேண்டியிருக்கிறது.
ஆமாம். முதலில் 14 மணிநேர ஊரடங்கு என்றார்களே, அது என்ன கணக்கு? யப்பா, என்னவெல்லாம் கூத்து நடந்தது. 14 மணி நேரத்தில் கொரோனா அழிந்துவிடுமாம், கைதட்டும் ஓசை பிரபஞ்சத்தில் எதிரொலிக்குமாம், ஒன்பது மணிக்கு ஒன்பது நிமிடம் அடிக்கும் டார்ச் லைட்டின் ஒளியால் கொரோனா இறந்துவிடுமாம். இதுதான் கொரோனா எதிர்ப்புப் போராட்டமா?
அரசை நம்பி அத்தனை மக்களும் வீட்டிலேயே இருந்து கைதட்டி, டார்ச் அடித்து ஒத்துழைத்தார்களே, அதற்குப் பலன்தான் என்ன? இப்போதும் கேட்கவில்லையென்றால், எப்போது கேட்பது?
அன்லாக் என்றார்கள். அய்யய்யோ கூடிவிட்டது. மீண்டும் லாக் என்றார்கள். அப்படியேனும் குறைக்கமுடிந்ததா? நகராட்சிகள், கிராமம் வரை லாக் எனக் கிளம்பும் கூத்து உலகத்தில் எங்கேனும் நடந்ததுண்டா? உலகமே நம்மைப் பாராட்டுவதாக கண்ணை மூடிக்கொண்டு பெருமிதத்தில் இருந்துவிடமுடியாதே? உண்மை துர்நாற்றமெடுத்தாலும் அதன் நடுவேதானே வாழவேண்டியிருக்கிறது..!
விதிமீறலுக்கு அபராதம் சரி. ஆனால், வாகன அபராதம் ரூ.18.5 கோடியை நெருங்குகிறதே அதன் அர்த்தமென்ன? சமூக ஒழுங்கின்மையா அல்லது விதிகளை மீறவேண்டிய நெருக்கடிகள் அதிகமாகிறதா?
அதுபோக, ஒவ்வொரு ஊரிலும் மாஸ்க் விதிமீறலென பல்லாயிரம் முதல் இலட்சம் வரை வசூல் நடக்கிறதே, அதன் நோக்கமென்ன?
நான்கு மணி நேரத்துக்கு ஒரு முகக்கவசம் எத்தனை பேருக்கு சாத்தியமாகிறது? கையைத்தொடாமல் கழட்டி, வீட்டுக்குள் நுழைந்த உடன் சோப்பு தண்ணீரில் சுத்தம் செய்து பயன்படுத்துவோர் எத்தனை பேர்? அபராதம் விதிக்கும் ஊழியர்களுக்குக்கூட இந்த நடைமுறை சாத்தியமில்லையே… விதிகளை அமல்படுத்த அபராதமும், டிவி பிரச்சாரமும் மட்டும் போதுமா?
அம்மை வந்தால் வீட்டு வாசலில் வேப்பிலையை கட்டிவைத்து தனிமைப்படுத்துதல், சமூக இடைவெளியென உண்மையான சமூகக் கட்டுப்பாட்டோடு இருந்த சமூகம் இன்று அபராதம் விதித்தும் அடங்கமாட்டேன்கிறதே, என்ன காரணம்?
ஊரடங்கின் நோக்கம் மக்களுக்குப் புரியவில்லையா? சரியாகத் திட்டமிடப்படவில்லையா? அல்லது வாழ்க்கை நெருக்கடியா?
எப்போது பரிசீலிக்கப்போகிறோம்?
ஊரடங்கு என்று அறிவித்தார்கள். அப்புறமேன் காலை முதல் மதியம் வரை சாலைக்கு வர அனுமதித்தார்கள்? அவசரக்காலத்தில் கூட நாட்டின் அனைத்து வீடுகளுக்கும் சென்று அத்தியாவசிய சேவை செய்யுமளவிற்கான அரசுக் கட்டமைப்பே இன்றுவரை இந்தியாவில் உருவாக்கப்படவில்லையா? ஒரு வேளை இப்படி யோசிப்பதே தவறா?
முழு ஊரடங்கிலும் தளர்வில்லா ஊரடங்கு என திடீர் திடீரென்று அறிவித்ததால் கூட்டம் கூடியதே, அதன் நோக்கமென்ன? கேள்வி கேட்பதன் மூலமாகத்தானே நாட்டை செம்மைப்படுத்திட இயலும், குற்றமல்லவே?
சீனாவில் பொம்மை, பிரிண்டர் என எது தேவையென்றாலும் வீடு சென்று கொடுத்ததாக செய்திகள் சொல்கிறதே, என் தாய்நாட்டில் சாத்தியமில்லையா?
Wuhan lockdown: How people are still getting food என்ற தலைப்பில் 2020 ஜன, 31 தேதியிட்ட பிபிசி, யுகானின் 11 மில்லியன் மக்களும் ஒரு சிறிய பலசரக்குப் பொருள் வாங்குவதற்கோ அல்லது சாப்பிடவோக்கூட சாலைக்கு நேரடியாய் செல்லவே முடியாதென எழுதுகிறது.
நூறு இன்ச் டிவியை ஒரு அடுக்குமாடியில் டெலிவரி செய்ய ஐந்து பேர் வந்தனர் என லைப் ஆன் லாக்டவுன் இன் சீனா என்ற தலைப்பில் நியூ யார்க்கர் இதழ் மார்ச்23ல் எழுதுகிறது.
ஏன் இங்கு இது சாத்தியம் கிடையாதா? டிவி வேண்டாம், அத்தியாவசியப் பொருட்களைக்கூட வீடுதோறும் கொடுக்கும் ஏற்பாட்டினை அரசால் செய்யவே இயலாதா? இப்படிக் கேட்பதும் எதிர்காலத்திற்கான ஒரு வேண்டுகோள்தானே, தவறல்லவே?
விதிமீறல் மட்டுமல்ல, அபராதம் வசூலிக்கும் அவசியமும் குறைந்திருக்குமே. வியாதி உருவானதாகச் சொல்லப்படும் யூகானே 76 நாளில் சரியாகிவிட்டது. இந்தியா 117வது நாளைக் கடந்துகொண்டிருக்கிறது. வளர்ச்சி என்பதன் அர்த்தம்தான் என்ன? தொழிற்சாலைகள், மால்கள் பெருகுவதா அல்லது மக்களைக் காக்கும் கட்டமைப்பு பலமடைவதா?
ஜனவரியில் சீனாவில் பரவியது. ஏப்ரல் 1ல் நம்மால் 4000 பேருக்குத்தான் பரிசோதனை செய்யவே முடிந்தது. இன்று, இரண்டு இலட்சத்திற்கும் மேல் பரிசோதனை செய்கிறோம். ஊரடங்கின் நோக்கம் நோயைக் கண்டறிந்து பரவலைத் தடுப்பதுதானே, மக்களை வீட்டில் இருக்கச் சொல்வது மட்டுமல்லவே. ஆக, நோயை எதிர்கொள்ள நாம் தயாரானதில் இருந்த தாமதம் வருங்காலத்தில் தவிர்க்கப்படவேண்டியதாயிற்றே…
உலக நாடுகளெல்லாம் 60 நாள், 70 நாள் லாக்டவுண் என அறிவித்தபோது, இங்கு மட்டும் 21 நாள் என்றார்களே, ஏன்? ஒவ்வொரு முறையும் ஊரடங்கை நீட்டிக்க ஆய்வு செய்து ஆய்வு செய்து, ஒரிரு நாளுக்கு முன்புவரை இழுத்து மீண்டும் ஊரடங்கென நீட்டித்தார்களே, ஏன்? முதலிலேயே 70 நாள் என அறிவித்திருந்தால் சென்னையில் இருக்கும் தமிழக இளைஞர்கள், இளைஞிகள் மட்டுமல்ல, வெளி மாநிலத்தவரும் அவரவர் ஊர் சென்றிருப்பார்களே, அவர்களை ஏன் நினைத்துப் பார்க்கவில்லை?
21 நாள்தானே எனக் கஷ்டத்தைத் தாங்கிக்கொண்டு, மூச்சைப் பிடித்துக்கொண்டு இருந்துவிடுவோமென சுமைக்கனவை உருவாக்கியது யார்? ஏன்? 70 நாட்கள் என முதலிலேயே அறிவித்தால் நிவாரணம், திட்டங்களெல்லாம் அறிவிக்க வேண்டிவருமே என்பதால் இருக்குமோ என்று சந்தேகிக்கவும் இயலவில்லை, காரணமும் தெரியவில்லை.
வடமாநிலத்தவரும் மனிதர்கள்தானே. உலகில் எந்த நாட்டிலாவது ஊரடங்கில் 500 மைல்கள் நடந்தவர்களை நாம் பார்த்தோமா? சாலையிலேயே பிரசவம் நடந்து, வழியும் இரத்தத்தோடு ஒரு இந்தியப் பெண் நடந்து சென்றாளே, இறந்துகிடந்த தாயை ஒரு குழந்தை எழுப்பியதே, என் தேசத்தாயே என்ன பதில் சொல்லப்போகிறாய்?
இப்போது தமிழகமெங்கும் பல மாவட்டத்திலும் பாதிப்புகள் உச்சம் தொடுகிறதே, சென்னையில் இருந்து சென்றவர்களால் பரவுகிறது என்கிறார்களே, இ பாஸ் வாங்கிச் சென்றவர்கள் மூலம் பரவுகிறதா? அல்லது டிரஸ்பாஸ் மூலம் பரவுகிறதா?
தொற்று இல்லாத காலத்திலேயே 70 நாள் ஊரடங்கு என அறிவித்திருந்தால், நிலைமையை உணர்ந்து அவரவர் ஊருக்கு அமைதியாய் சென்றிருப்பார்களே, ஏனிந்த குழப்பம்?
தாம்பரத்தில் இருந்து தண்டையார்பேட்டைக்கு ஒருவர் வரலாம். மன்னார்குடியில் இருந்து திருவாரூக்கு ஒருவர் வரலாம். ஆனால், நாகையில் இருந்து திருவாரூர் வந்துவிடக்கூடாது, காஞ்சியில் இருந்து தாம்பரம் வந்துவிடக்கூடாது. காவல் எல்லை, மாவட்ட எல்லை, நகராட்சி எல்லையெல்லாம் கொரோனா அறியுமா என்ன?
எட்டுமணிக்குள் கடையை மூடவேண்டுமாம். ஒன்பது மணியானால் தானாய் மூடிவிட்டு உறங்கச் சென்றுவிடுவார்கள், அந்த ஒரு மணி நேரத்திற்குள் என்னய்யா ஆகிவிடப்போகிறது?
இதோ, கொசுவை ஒழிக்க கோடாரி வேண்டாமென மருத்துவரே சொல்லிவிட்டார்.
ஆம். ஊரடங்கு போதுமென மருத்துவ உலகிலிருந்தே மெதுவாய்க் கிளம்பிய குரல் இப்போது பரவலாய் எழும்பத் தொடங்கிவிட்டது.
இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும்?
யாரிடம் கேட்பது? மக்களாட்சி நடைபெறும் உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடு இந்தியா.
நிச்சயம் ஆட்சியாளர்கள் சிந்தித்துக்கொண்டிருப்பர்கள் என நம்புகிறேன்.
65 சதமானோர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர் எனும் நற்செய்தி இருக்கையில் அவசியமற்ற பயமேன்? ஆட்சியாளர்களை நம்புவோம்..
Comments