top of page
Search
Writer's pictureAcu Healer

கொரோனா காலத்தில் அக்கு ஹீலர்கள் ஏன் அமைதியாக இருக்கிறோம்..? நமது கடமை என்ன..?

அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக்

கொரோனா தாக்கம் பற்றிய விதம் விதமான கருத்துகள் உலக மக்கள் அனைவரையும் சுற்றி வருகின்றன. இது இலுமினாட்டிகளின் சதி என்பதில் துவங்கி, ”அரசியல் காரணங்கள்”, ”இது ஊழிக்காலம்”,” தீர்ப்பு நாள்”, ”தீயவற்றை அழிக்கும் இயற்கையின் திட்டம்”, “பரப்பப் பட்ட நோய்” என்று அவரவருக்குத் தோன்றும் வகையில் எண்ணற்ற விளக்கங்கள் தரப்பட்டு வருகின்றன. நமது ஹீலர்களும் அவரவருக்குக் கிடைத்த அல்லது தான் நம்பும் பலவற்றை பரப்பிக் கொண்டும் இருக்கிறார்கள்.

இதே போல, நோய்க்கான தீர்வாக கங்கா ஸ்நானம் முதல் கபசுரக் குடிநீர், பாராசிட்டமால் என பல வகை மருத்துவங்களும் முன்வைக்கப்படுகின்றன. உலகமே கொரோனாவை நோக்கி பரபரப்பாக இயங்கிக் கொண் டிருக்கும் போது நாம் ஏன் அமைதியாக இருக்கிறோம்?

இந்தச் சூழலில் பயமற்று, அமைதியாக இருப்பதே சாதனைதான் என்றாலும், வேறு நடவடிக்கைகளில் நாம் ஏன் ஈடுபடவில்லை என்ற கேள்விகள் பலருக்கு மனதிலும், சிலர் குழுக்களிலும் எழுப்பியுள்ளனர்.

பேரிடர் காலச்சட்டமும், தொற்று நோய்ப் பரவல் சட்டமும் நம் நாட்டில் இப்போது அமலில் இருக்கின்றன. அடிப்படை மனித உரிமைகளையும் மறுக்கும் தன்மையுள்ள சட்டங்கள் இவை என்ற புரிதலோடு சூழலை அணுக வேண்டும்.

# மரபுவழி மருத்துவங்களில் எல்லா நோய்களுக்கான தீர்வு இருக்கும் போது நாம் ஏன் அக்குபங்சரை அரசுக்கு பரிந்துரைக்கவில்லை?

அக்குபங்சரை இந்நோய்க்கு எதிராகப் பயன்படுத்துவதில் இரண்டு முறைகள் இருக்கின்றன. ஒன்று – அரசிடம் சொல்வது. இன்னொன்று – மக்களிடம் சொல்வது.

நாம் இப்போது முதல் வேலையைப் பற்றிப் பேசுகிறோம். அதற்கு அரசின் மருத்துவ அமைப்புகள் பற்றி, அரசின் பார்வையில் புரிந்து கொள்வது அவசியம்.

இந்தியாவின் மரபு வழி மருத்துவங்கள் பல இருந்தாலும் அவை மூன்று வகையில் அடங்கும். முழுமையான அங்கீகாரம் பெற்ற மருத்துவங்கள் (சிஸ்டம்), சிகிச்சை அனுமதி அளிக்கப்பட்ட மருத்துவங்கள் (தெரபி), அங்கீகரிக்கப்படாத மருத்துவங்கள்.

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவங்களாக இருப்பவை சித்தா, ஹோமியோ, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம் ஆகியவை. தெரபியாக இருப்பது – அக்குபங்சர். அங்கீகரிக்கப்படாதவைகளாக இருப்பவை – மலர் மருத்துவம், பயோ கெமிகல், எலக்ட்ரோ ஹோமியோ என்று எண்ணற்றவை.

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவங்களுக்கு அரசு மருத்துவ கவுன்சில்கள் தனித்தனியே இயங்கிக் கொண்டிருக்கின்றன. தெரபிகளுக்கு அமைப்பு உருவாக்கப்படவில்லை. (அக்குபங்சருக்கான தனி கவுன்சிலை உருவாக்க நாடாளுமன்றம் பரிந்துரை செய்துள்ளதும், மேற்குவங்கம் – மகராஷ்டிட்ராவில் அக்குபங்சர் கவுன்சில் ஏற்கனவே இருப்பதும் நமக்குத் தெரிந்திருக்கும்.)

அரசு ஆங்கில மருத்துவம் பற்றி ஒரு முடிவினை, ஒரு பரிந்துரையை செய்ய வேண்டுமானால் ஆங்கில மருத்துவக் கவுன்சிலின் தலைமையோடு ஆலோசித்து, ஆராய்ச்சி கவுன்சிலின் அனுமதியோடுதான் அறிவிக்க முடியும். இந்த இரண்டு அமைப்புகளில் ஒன்று முரண்பட்டாலும் அதனை அரசு அறிவிக்காது.

இதே போல, சித்த மருத்துவத்தில் ஒரு பரிந்துரையை அரசு அறிவிக்க வேண்டுமானால், சித்த மருத்துவக் கவுன்சிலும், ஆராய்ச்சிக் கவுன்சிலும் பரிந்துரைக்க வேண்டும். இப்படித்தான் எல்லா மருத்துவங்களுக்குமான மருத்துவப் பரிந்துரைகள் அரசால் அளிக்கப்படுகின்றன.

சித்த மருத்துவத்தில் இந்த நோய்க்கு மருந்து இருக்கிறது என்று யூ டியூபில் பேசுவதும், ஃபேஸ்புக்கின் மூலம் பதிவு செய்வதும் வெறும் விளம்பர உத்திதான். ஒருவேளை அதைப் பார்த்து நம்புகிற தனி மனிதர்களுக்கு வேண்டுமானால் பயன்படலாமே தவிர, இந்த தகவல் அரசுக்குச் சென்றாலும் எந்தப் பயனும் இல்லை. முறையான அரசு கவுன்சில்கள் வழியாக பரிந்துரை சென்று, ஆராய்ச்சிக் கவுன்சில் அனுமதித்தால் மட்டும்தான் அரசு கலந்துரையாடலுக்கே அது செல்லும்.

சரி. . .இப்போது சொல்லுங்கள். . அக்குபங்சரை இந்நோய்க்கான சிகிச்சைப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

நமக்கான முறையான கவுன்சில் எதுவும் இல்லை என்பதால் சங்கம் மூலம் அரசின் பொதுப்பிரிவை நாம் அணுகலாம். அது மருத்துவக் கவுன்சில்களின் பார்வைக்கோ, ஆராய்ச்சிக் கவுன்சிலின் பார்வைக்கோ செல்லாது. அப்படியே சென்றாலும், சில விநாடிகளில் அது நிராகரிக்கப்படும். இது அனுமானமோ, முன் முடிவோ அல்ல. இதுதான் நடைமுறை.

இந்த நடைமுறையை மீறி என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன?

சித்த மருத்துவர்கள் கவுன்சிலுக்கு சில விஷயங்களைப் பரிந்துரைத்தார்கள். ஆனால், அது அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, உயர் நீதி மன்றம் மூலமாக அவசர வழக்காகப் பதிவு செய்யப்பட்டு சித்தா கவுன்சிலிடம் ஆலோசிக்க வேண்டும் என்று ஆணை பெறப்பட்டது. (சித்தா கவுன்சிலில் பொறுப்பில் உள்ள மருத்துவர்கள் “எந்த ஆலோசனையும் இல்லை” என்றோ, ஏதோ மருந்தினை பரிந்துரைக்கவோ செய்யலாம்.

உலக அக்குபங்சர் அமைப்புகளின் கூட்டமைப்பு (WFA) உலக சுகாதார நிறுவனத்திற்கு பல புள்ளி அக்குபங்சர் சிகிச்சை குறித்த சில பரிந்துரைகளை சென்ற மாதம் அனுப்பியது. அது உலக சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் ”பரிசீலனை”யில் உள்ளது. . . கடந்த ஒரு மாதமாக. இத்தனைக்கும் உலக அக்குபங்சர் கூட்டமைப்பு என்பது உலக சுகாதார நிறுவனத்தின் இணைப்பு பெற்ற ஒரு சர்வதேச அமைப்பு.

அடுத்ததாக, மகராஷ்டிரா அக்குபங்சர் (அரசு) கவுன்சில் சில அக்குபங்சர் புள்ளிகளை அரசுக்குப் பரிந்துரை செய்தது. அதுவும் அரசின் ”ஆழ்ந்த பரிசீலனை”யில் உள்ளது. இதுதான் அக்குபங்சர் சிகிச்சை பற்றிய அரசின் பார்வை. அதுவும் அரசு கவுன்சிலின் பரிந்துரைகளுக்கான கவனிப்பே இவ்வளவுதான்.

தமிழகத்தில் அக்குபங்சருக்கான அரசு கவுன்சில் இல்லை. இயற்கை மருத்துவத்தின் கீழுள்ள ஒரு சிகிச்சை முறையாகவே அரசால் அக்குபங்சர் பார்க்கப்படுகிறது. இயற்கை மருத்துவத்திற்கான அமைப்பு ஏற்கனவே இதற்கான அரசு கலந்துரையாடலில் பங்கேற்று அமைதி காக்கிறது. ( இயற்கை மருத்துவத்தில் பட்டப்படிப்பு படித்தவர்கள்தான் அக்குபங்சர் சிகிச்சை அளிக்க முடியும் என்று ஒரு சுற்றறிக்கை அனுப்பி, அதை எதிர்த்து நாம் நீதிமன்ற வழக்கு தொடர்ந்துள்ளது வேறு கதை). இயற்கை மருத்துவம் படித்த அக்குபங்சரிஸ்டுகள் ஒருவேளை சில புள்ளிகளைப் பரிந்துரைத்தாலும், அது ஆராய்ச்சிக் கவுன்சிலுக்குத்தான் போகுமே தவிர அரசின் நேரடிப் பார்வைக்கு போகாது.

இவை அனைத்தும் சட்ட ரீதியான நடைமுறைகள். இவை அனைத்தையும் கடந்து நாம் போராடி, அரசுக்குப் புரியவைக்க இந்த சூழலில் முடியுமா. . ?

சரி. . முடியும் என்று வைத்துக் கொள்ளலாம். பெரும் போராட்டத்தின் மூலம் நம் அரசின் பார்வையைப் பெறுகிறோம். ஒருவழியாக அரசு நம்மிடம்கேட்கிறது “ எந்தெந்தப் புள்ளிகள் இந்நோயை குணமாக்கும் என்று பரிந்துரைக்கிறீர்கள்?” என்று. இப்போது என்ன சொல்லலாம். . ? “அக்குபங்சர் தத்துவப் படி அப்படி பரிந்துரைக்க இயலாது” என்றா. . ?

இப்போது பிரச்சினை தத்துவத்திற்குள் வந்து விட்டது.

எல்லா மரபுவழி மருத்துவங்களுக்குமான பொது தத்துவம் – தனித்தனைமை என்பதுதான். ஒரு நோயாளியை, அவருடைய பஞ்சபூத நிலையின் அடிப்படையில் கணித்து, அவருக்கான தனியான மருந்தினைப் பரிந்துரைப்பது மரபு வழி மருத்துவங்களின் தத்துவமே.

இப்படி இல்லாமல் மாடர்ன் சித்தா, மாடர்ன் ஹோமியோ என்று கபசுர குடிநீர் என்றோ, ஆர்சனிக் ஆல்பம் என்றோ ஒரு மருந்தின் பெயரைப் பரிந்துரைக்கும் போது தத்துவம் பிறழ்ந்து போகும். இது தவறான பரிந்துரையாகவும் இருக்கும். இரண்டு மருத்துவங்களிலும் இந்தப் பரிந்துரை குறித்து கடும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதையும் தாண்டி, அரசு இதனை நடைமுறைப் படுத்துகிறதா என்பதை கூர்ந்து கவனியுங்கள். வெறும் அறிவிப்போடு நின்று போகும். . .அதுவும் தவறான தத்துவத்தோடு.

அரசு பெயரளவுக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தால், நாமும் தத்துவத்திலிருந்து விலகி பத்துப் புள்ளிகளைச் சொல்லி விட்டு வந்து விடலாமா. . ? “நானும் ரவுடிதான்” என்று சும்மா ஒரு சத்தம் கொடுப்பதற்கான, தத்துவத்தை தூக்கி வெளியில் எறிந்து விடலாமா. . ?

“அக்குபங்சர் என்பது ஒரு தனித்துவமான மருத்துவம் சார். . . நோய் வந்த சிலரை எங்களிடம் கொடுங்கள். . நாங்கள் நாடி பார்த்து, சிகிச்சை அளித்து குணப்படுத்துகிறோம். . “ என்று ஒரு கவுன்சில் தலைவரிடமோ, அமைச்சரிடமோ இந்த சூழலில் சொல்வது பொருத்தமாக இருக்குமா. . ?

நீங்கள் அரசின் பார்வையில் இருந்து யோசியுங்கள். . சாதாரண காலத்திலேயே ஒரு புள்ளி சிகிச்சை முறையை அரசிற்கு புரிய வைப்பதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன? அவசர காலமாகக் கருதப்படுகிற இந்த சூழலில் நமது குரல் என்ன ஆகும்?

இப்போது நமது பணி மருத்துவத்தின் தனித்தன்மையைக் காப்பதா? அல்லது அதன் தத்துவத்தை பலிகொடுத்து விட்டு, வருகைப் பதிவு செய்வதா. . ?

சரி அப்படியானால் நாம் என்னதான் செய்ய முடியும். .? அரசை அணுகுவதற்கான காலம் இதுவல்ல. ஒரு முழு மருத்துவத்திற்கான முயற்சிகள் அகில இந்திய அளவில் நடந்து கொண்டிருக்கும் போது, அரசை நோக்கிய முயற்சிகள் அவசியமில்லாதவை. குழப்பத்தை ஏற்படுத்துபவை. எனவே, இரண்டாவது பணியான மக்களை அடையும் வேலையைத் தொடர்ந்து செய்யலாம்.

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது ஒரு தொடர் பணி. இதனை இன்ஸ்டண்ட் ஆக செய்ய இயலாது. ஏற்கனவே நாம் நடத்திய பல்லாயிரம் உடலே மருத்துவர் நிகழ்ச்சிகள், நம் சிகிச்சை மையங்களில் இயற்கை வாழ்வியலைப் பின்பற்றும் ஹீலிகள் என லட்சக்கணக்கான மனிதர்கள் கொரோனா குறித்த அச்சமின்றி இருப்பதை நாம் பார்க்கிறோம். நாம் செய்த பணியின் விளைவுகளைக் குறைத்து மதிப்பிட இயலாது. வாழ்வியலைப் புரிந்து கொண்டவர்களுக்கு நாம் தொடர்ந்து, எல்லா சூழலிலும் வழிகாட்டுவோம். . .தேவைக்கு சிகிச்சை அளிப்போம். இதுவே நம் முன்னால் உள்ள ஒரே பணி. சூழல் மாறியதும் நம் வழக்கமான பணிகளை முன்னிலும் வேகமாகத் தொடர்வோம்.

நாம் ஒன்றும் செய்ய முடியாத காலமாக இதனைப் புரிந்து கொண்டு, கவலைப் பட வேண்டியதில்லை. இந்தக் காலத்தின் மருத்துவ நடவடிக்கைகள், அரசு அறிவிப்புகள், பதட்டம் அனைத்தும் அடுத்து வரும் காலத்தில் நமது பணிகளை அதிகப்படுத்தப் போகின்றன. பெரும் திரளான மக்கள் நம்மை நோக்கி வரப் போகிறார்கள்.

நோய் வந்த பிறகான சிகிச்சையை விட, இயல்பான வாழ்க்கை முறையின் அவசியம் உணரப்படும். உலகில் நோய்த்தாக்கம் எந்தப் பகுதியில் இல்லை என்பதும், பாதிக்கப்படாதவர்கள் யார் என்பதும் தொடர் ஆய்வுகளில் வெளிவரும். அதன் பின்னணியில் இயற்கை வாழ்வியல் மட்டுமே இருக்க முடியும் என்பது நாம் அறிந்ததுதான். அதே போல, நோய்த்தாக்கம் யாருக்கு அதிகம்? யாரெல்லாம் மரணமடைந்தார்கள்? என்பதைப் பற்றிய ஆய்வுகளும் துவங்கி விட்டன. கழிவுத்தேக்கம், ஆரோக்கியமின்மை, ரசாயனப் பயன்பாடு என செய்திகள் வெளிவரத் தொடங்கும். வெளிப்படுத்தப்படவில்லை என்றாலும் நாம் வெளிப்படுத்தும் முயற்சிகளைத் துவங்குவோம். ஆய்வுகளைக் கடந்து, பெரும்பாலான மனிதர்கள் வாழ்வியலின் முக்கியத்துவத்தை உணர்வார்கள். நமது ஓய்வுக்காலம் முடிந்து, தொடர் செயல்பாடுகள் காத்திருக்கின்றன. . .தயார் ஆகுங்கள்.

நிதானமான மனநிலையோடு நம் பணிகளைத் தீவிரப் படுத்துவதற்கான, ஆழப்படுத்துவதற்கான சிந்தனைகளில் நிலைத்திருங்கள். . . இயற்கை அதற்கான வஅய்ப்பினை வழங்க காத்திருக்கிறது. .


 

280 views0 comments

Recent Posts

See All

கொரோனா: இப்போதேனும் சிந்தியுங்கள்இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது குறித்து…

அக்கு ஹீலர். இல.சண்முகசுந்தரம் இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் இப்படியே பயந்துகொண்டிருப்பது? கொரோனாவிற்கு மட்டுமல்ல, முகக்கவசம், சமூக...

கொரோனா: அமெரிக்க மரணங்கள் உணர்த்தும் உண்மைகள்

- அக்கு ஹீலர். இல. சண்முகசுந்தரம் ஜூலை.8, வோர்ல்ட்மீட்டர் இணைய தகவலின்படி, அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 3,158,932. இறந்துபோனோர் 134,862....

Commenti


bottom of page