top of page
Search
Writer's pictureAcu Healer

கொரோனா: அமெரிக்க மரணங்கள் உணர்த்தும் உண்மைகள்

- அக்கு ஹீலர். இல. சண்முகசுந்தரம்

ஜூலை.8, வோர்ல்ட்மீட்டர் இணைய தகவலின்படி, அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 3,158,932. இறந்துபோனோர் 134,862.

கொரோனாவை பார்த்து நாம் அச்சங்கொள்வதற்கு அமெரிக்க மரணங்கள்தான் மிகப்பெரும் காரணமாகும். பிரேசில், ஸ்பெயின்,இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவையும் நம்மை அச்சப்படுத்திய நாடுகளாகும்.

நாமெல்லாம் ஆச்சர்யமாய் பார்க்கும் இந்த நாடுகளெல்லாம் வளர்ந்த நாடுகளென தம்மைச் சொல்லிக்கொள்ளும் நாடுகளாகும். ஆய்வுக்கூட மருத்துவ ஆய்வுகளை நம்பியுள்ள மருத்துவ வசதிகளும் மிக அதிகமுள்ள நாடுகளாகும். ஆனால், இந்த உலகையே மரண பயத்துக்குள் தள்ளிய நாடுகளும் இவைதான்.

என்னே முரண் பார்த்தீர்களா!

மருத்துவம் வளர்ந்த இந்த நாடுகளில் கொரோனாவால் மரணங்கள் அதிகரிக்க காரணம் என்னவாக இருக்கும்? உதாரணத்திற்கு அமெரிக்காவை எடுத்துக்கொள்வோம்.

1957ல் H2N2 பரவியபோது 116,000 பேரும், 1968ல் H3N2 பரவியபோது 100,000 பேரும், 1918ல் H1N1 என்றொரு வைரஸ் பரவியபோது அமெரிக்காவில் 675,000 பேர் இறந்துள்ளனர்.

2.4 இலட்சம் பேர் வரை அமெரிக்காவில் கொரோனாவால் இறந்துபோகலாம் என்றும் அமெரிக்க அதிபர் ஏப்ரல் 1 அன்று அறிவித்தார்.

அது மட்டுமல்ல, இன்புளுயன்சா எனும் காய்ச்சல் அமெரிக்காவில் வருடந்தோறும் அக்டோபரில் துவங்கி, பிப்ரவரியில் குறையத் தொடங்கும். அதற்குப் பலியானோர் எண்ணிக்கை 2018-19 சீசனில் 34,200 என்கிறது அமெரிக்காவின் நோய் தடுப்பு மையம். cdc.gov/flu எனும் அரசு இணையதளத்திற்குள் சென்றால் அத்தனை விபரங்களையும் பார்க்கலாம்.

அந்தத்தளம் கூறும் தகவல்கள்.

2018-19ல் 35.5 மில்லியன் மக்களுக்கு காய்ச்சல் வந்ததாம், அதில் 16.5 பேர் சிகிச்சை எடுத்தார்களாம், 490,000 பேர் மருத்துவமனையில் சேர்ந்ததில் 34,200 பேர் இறந்துபோனார்கள்.

பருவக் காய்ச்சல் என்பது மில்லியன் கணக்கானவர்களைப் பாதிக்கும் தீவிரமான ஒரு நோயாகும். பல நூறு ஆயிரங்களில் மக்களை மருத்துவமனையில் சேர்க்கும் இந்நோய் பல பத்தாயிரம் பேரை ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் கொல்கிறது.

எத்தனை பேருக்குக் காய்ச்சல் வருகிறது, அதில் எத்தனை பேர் இறந்துபோகிறார்கள் என்ற சரியான தகவலும் அமெரிக்காவில் கிடையாதாம். அதை ஒரு கேள்வியாய் எழுப்பி, அவர்களே பல பதிலும் அளித்துள்ளனர்.

இறப்பு ஒவ்வோராண்டும் பன்னிரெண்டாயிரம் முதல் 61 ஆயிரம் வரையும் மாறுபடும் என்றும் பாதிப்பு குறித்து ஒரு படம் மூலம் கீழ்கண்டவாறு பதிவிட்டுள்ளார்கள்.

ஆக, காய்ச்சலென்பது அந்த நாட்டில் வருடந்தோறும் பல்லாயிரம் மக்களைக் கொல்லும் நோயென்று நமக்குத் தெளிவாய்ப் புரிகிறது.

அதாவது, அமெரிக்கர்களின் உடல்நிலை எப்போதும் ஆபத்தானதாகவே இருக்கிறதென்று உண்மைகள் சொல்கின்றன.

அமெரிக்கா ஒரு வளர்ந்த நாடு, மருத்துவ வசதியெல்லாம் அங்கே அதிகமென்றுதான் நாமெல்லாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அரசின் நோய்த் தடுப்பு மைய இணையத்தில் சென்று தகவல்களைப் பார்த்தால் நோய்களின் தாக்கம் அமெரிக்காவில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதென்று சொல்கிறது புள்ளிவிபரங்கள்.

அதைக் கொஞ்சம் பார்த்துவிட்டு அதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகளை அடுத்துப் பேசுவோம்.

அமெரிக்க மக்களில் ஒவ்வொரு ஆண்டும் 859,000 பேருக்கும் மேலாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் நோயால் மரணமடைகிறார்கள் என்கிறது அதே இணையதளத்தில் உள்ள chronicdisease எனும் உட்பிரிவு. அதாவது, அமெரிக்க மரணத்தில் மூன்றில் ஒருவர் இப்படி இறந்துபோகிறாராம். வருடந்தோறும் 199 பில்லியன் டாலர் செலவை இழுக்கும் இந்நோய் 131 பில்லியன் டாலர் உற்பத்தியையும் வேலைவாய்ப்புத்துறையில் ஏற்படுத்திவிடுகிறதாம்.

இதுதான் அமெரிக்காவின் பொருளாதாரப் பார்வையாகும். ஒவ்வொரு நோயாலும் எவ்வளவு வருமானமென்றும், எவ்வளவு செலவென்றும், அந்த நோயால் உற்பத்தி இழப்பு எவ்வளவென்றும் கணக்கிடுகிறார்கள், அதனால்தானோ என்னவோ, “WE CANNOT LET THE CURE BE WORSE THAN THE PROBLEM ITSELF,” அதாவது, கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளை விடவும், அதைத் தடுக்கும் நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்புகளால் நாடு மோசமாகிவிட அனுமதியோம் என்று துவக்கத்திலேயே சொல்லிவிட்டார் அமெரிக்க அதிபர்.

அமெரிக்காவின் மக்கள் தொகையில் 18 வயதுக்கு மேலானவர்களில், பத்தில் ஆறு பேருக்கு குரோனிக் டிசீஸ் எனச் சொல்லப்படும் நீடித்த நோய்கள் இருப்பதாகச் சொல்லும் அந்தத் தளம், பத்தில் நான்கு பேருக்கு இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட நீடித்த நோய்கள் இருக்கிறது என்கிறது.

அதாவது, பத்தில் ஆறென்றால், நூறில் அறுபது சதமென்று அர்த்தம். ஆக, பாதிக்கும் மேற்பட்டோர் நீண்டகால நோயர்கள். வாழ்நாள் மருந்து, மாத்திரையென சிகிச்சையில் உள்ளவர்கள். நாற்பது சதமானோர் இரண்டு மற்றும் இரண்டிற்கும் மேற்பட்ட நோயர்கள்.

ஒவ்வொரு வருடமும் 1.6 மில்லியன் மக்களுக்கு புற்றுநோய் பரிசோதனை செய்யப்படுகிறதாம். அதில் ஆறு இலட்சம் பேர் புற்றுநோயால் ஒவ்வொரு ஆண்டும் இறந்துபோகிறார்களாம். அமெரிக்க மரணங்களில் புற்றுநோய்க்கு இரண்டாவது இடமாம்.

34.2 மில்லியன் மக்களுக்கு நீரழிவும், 88 மில்லியன் மக்களுக்கு நீரழிவுக்கு முந்தைய நோய் இருப்பதாகவும் சொல்லும் அந்தப் புள்ளிவிபரம், நீரழிவால் பல நோய்கள் உருவாகி திடீர் மரணங்களும் அதிகரிக்குமென்கிறது.

ஆர்த்ரிடிஸ் எனப்படும் கீல்வாதம் 54.4 மில்லியன் மக்களைப் பாதிக்கிறதாம். அதாவது, 18 வயதுக்கு மேலான நான்கில் ஒருவர் இந்நோயால் பாதிக்கப்படுகிறாராம். இவர்களால் எந்த வேலையும் செய்ய இயலாத நிலையில் உள்ளனராம். இவர்களுக்கு கொரோனா தாக்கம் அதிகமாய் இருக்குமென்பதை நாமறிவோம்.

அடுத்ததாய், அல்சமைர் எனப்படும் டிமென்ஷியா நோய், 5.7 மில்லியன் அமெரிக்கர்களை ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கிறது. 2040க்குள் இந்நோயால் ஏற்படும் மருத்துவச் செலவுகள் 500 பில்லியன் டாலர் வரை சென்றுவிடுமாம்.

18 வயதுக்கு மேலானவர்களில் 3 மில்லியன் பேரையும், குழந்தைகளில் 470,000 பேரையும் பீடிக்கும் மற்றொரு நோய் எபிலிப்சி எனப்படும் கால் கை வலிப்பு நோயாகும். அடுத்ததாய், கேவிட்டிஸ் எனப்படும் பல்நோய்கள். ஐந்தில் ஒரு குழந்தையையும், நான்கில் ஒரு வயது வந்தோரையும் தாக்குகிறதாம்.

16 மில்லியன் அமெரிக்கர்கள் சிகரெட் சம்பந்தப்பட்ட எதேனும் ஒரு நோயால் பாதிக்கப்படுகிறார்களாம். பொதுவாக அமெரிக்காவில் அதிகரிக்கும் மரணத்துக்கு இந்நோய் முக்கியக் காரணம் என்கிறது அமெரிக்க நோய்த் தடுப்பு மையம். கொரோனா உயிர்ப்பலிக்கு இதைவிடவும் பெரிய காரணம் வேண்டுமா?

வரிசைப்படி அடுத்து ஒரு நோய் சொல்கிறார்கள். அது என்ன தெரியுமா?

உடல் உழைப்பே இல்லாத காரணத்தால் வரும் நோய்கள் என்றும், இருதய அடைப்பு, இரண்டாம் வகை நீரழிவு, சில வகை புற்றுநோய் மற்றும் உடல்பருமன் நோய்கள் என்றும் வகைப்படுத்துகிறார்கள்.

அடுத்து முக்கியமானது, அளவிற்கு அதிகமான மது அருந்துவதால், வருடத்திற்கு 88,000 பேர் இறந்துபோகிறார்கள் எனும் தகவல். குறிப்பாக, வேலை செய்யும் இளம்பருவத்தில் ஏற்படும் பத்து மரணங்களில் ஒரு மரணம் ஆல்கஹால் மரணமாம். ஆம். கொரோனா மரணத்திற்கும் இதுதான் முக்கியக் காரணமாகும்.

இதுதான் நமக்கு நன்றாய்த் தெரிந்த அமெரிக்கா எனும் நாட்டில் உள்ள நமக்குத் தெரியாத நோய் நிலைமைகள் ஆகும். கொரோனா மரணங்கள் ஏன் அமெரிக்காவில் அதிகரித்தது என்பதை இப்போது நினைத்துப்பாருங்கள்.

ஒரு நாடு வளர்ந்த நாடு என்று எதை வைத்து முடிவெடுக்கிறோம்? சென்னை வளர்ந்த நகரமா? தொழிற்சாலைகள் அதிகமாகிவிட்டால் அந்நகரமோ அல்லது அந்நாடோ வளர்ந்த நாடாகிவிடமுடியுமா? அமெரிக்காவின் அனுபவங்களோடு பொருத்திப் பாருங்கள். நமக்கான எச்சரிக்கைகள் கிடைத்துவிடும்.

அமெரிக்காவில் கொரோனா காலத்தில்தான், 50 சதமான மக்கள் சமைக்க ஆரம்பித்திருக்கிறார்களாம். ஒரு செய்தி கூறுகிறது. ஆம். இந்தியர்களின் நோயெதிர்ப்பு சக்தி இன்றளவும் ஓரவிற்கேனும் பாதுகாப்பாய் இருக்கிறதென்றால் அதற்கான காரணமாய் ஐந்தினைக் குறிப்பிடலாம்.

1. சமைத்துச் சாப்பிடும் உணவு முறை மற்றும் இயற்கையான சில உணவுகள். ஆக, இந்தியாவில் அதிகரிக்கும் பேக்கேஜூடு, ஹைஜீனிக் உணவுகளை தவிர்க்கவேண்டும்.

2. அன்றாடம் சிறிது தூரமேனும் நடந்து செல்லும் வாழ்க்கைமுறை மற்றும் உடல் உழைப்பு.

3. மது, சிகரெட் பயன்பாடு அதிகரித்தாலும், பயன்பாட்டின் அளவு அபாய எல்லையைத் தாண்டாமல் இருப்பது மற்றும் இரவு நேர கேளிக்கைகளில் மொத்த நாடும் இன்னும் மூழ்காமல் இருப்பது.

4. எதற்கெடுத்தாலும் மருந்து, மருந்து என்று ஓடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பினும், மரபு மருத்துவங்களை நம்புவோர் எண்ணிக்கையும், சமையல் பொருட்களை வைத்தே நோயைக் குணமாக்குவோரும் கணிசமாய் இருப்பது.

5. மூச்சுத் திணரும் சுற்றுச் சூழல் பாதிப்புகளுக்கு முழுமையாய் ஆட்படாமல் இருக்கும் கிராம மற்றும் சிறு நகர வாழ்க்கை முறை.

இந்த ஐந்தும் மிக முக்கியக் காரணங்கள் ஆகும். எனவே, இந்த ஐந்தினையும் இனியேனும் புரிந்து காப்பாற்ற வேண்டியுள்ளது.

உடலில் தொந்தரவுகள் ஏற்படும்போது உங்கள் உடலே அதைக் குணப்படுத்தும். நாம் அதை உணர்ந்தால் போதும். பசி, தாகம், தூக்கம், ஓய்வென உடல் சொல்வதைக் கவனித்து அதற்கேற்ப நடந்துகொள்ளுங்கள். பசியில்லாதபோது சாப்பாடு வேண்டாமென உடல் சொல்வதாய் புரிந்து ஒத்துழையுங்கள்.

இயல்பாக நமது உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு சக்தியை இப்படியாக மட்டும்தான் இயற்கையாய் பாதுகாக்க இயலும். அதை மருந்து, மாத்திரையால் நிச்சயம் உருவாக்கிவிட முடியாது என்பதே அமெரிக்க தகவல்கள் உணர்த்தும் உண்மையாகும்.

ஆம். அமெரிக்காவில் உள்ள நோய்களை மீண்டும் வாசியுங்கள். கொரோனா பாதிப்பின் காரணம் புரியும். வருடம்தோறும் வரும் இன்புளுயன்சா காய்ச்சலுக்கு தடுப்பூசியும் போட்டுக்கொள்கிறார்கள். வாஷ்பேஷின், கிருமி, ஹைஜீனிக் எனக் கண்டுபிடித்த மேலைநாடுகளைப்போல் நாம் கைகழுவி விடவும் முடியாது.

ஆயினும், சாதாரண சளியைக்கூட இயற்கையாய் குணப்படும் திறனை ஒரு உடல் கொண்டிருக்காவிட்டால், கொரோனா கிருமி வரும்போது அந்த உடல் திணறத்தானே செய்யும்?

ஆம். இப்போது அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

ஆக, ஒரு சாதாரண நோய்க்குக் கூட மருந்து, மாத்திரை என்று மட்டுமே நம்பியிருப்போர் தன் உடலை ஆரோக்கியமாய் வைத்துக்கொள்வது குறித்து எப்போது சிந்திப்பர்?

இப்போதாவது சிந்தியுங்கள்..

கொரோனா பயத்திலிருந்து வெளிவாருங்கள்…

Courtesy: www.cdc.gov

64 views0 comments

Recent Posts

See All

கொரோனா: இப்போதேனும் சிந்தியுங்கள்இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது குறித்து…

அக்கு ஹீலர். இல.சண்முகசுந்தரம் இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் இப்படியே பயந்துகொண்டிருப்பது? கொரோனாவிற்கு மட்டுமல்ல, முகக்கவசம், சமூக...

கொரோனா காலத்தில் அக்கு ஹீலர்கள் ஏன் அமைதியாக இருக்கிறோம்..? நமது கடமை என்ன..?

அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக் கொரோனா தாக்கம் பற்றிய விதம் விதமான கருத்துகள் உலக மக்கள் அனைவரையும் சுற்றி வருகின்றன. இது இலுமினாட்டிகளின் சதி...

Comments


bottom of page